முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916)

பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916)
20 டிசம்பர் 1916 அன்று பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916) வெளியானது. அறிக்கையில் கையெழுத்து போட்டவர் சங்கத்தின் செயலாளர் பிட்டி, தியாகராய செட்டியார்.விரிவான, விளக்கமான அறிக்கை அது. மாநிலத்தின் மக்கள் தொகை நாலரை கோடி. அதில் நாலு கோடிக்கும் குறையாதவர்கள் பிராமணர் அல்லாத மக்கள். வரி செலுத்துவோரில் பெரும்பான்மையோர் அவர்களே. ஆனாலும் அரசியலைத் தம் வாழ்க்கைக்கு வருவாய் தரும் தொழிலாக உடைய அரசியல் வணிகர்களும் மக்களிடையே செல்வாக்கு இல்லாத தான்தோன்றிகளும் நாட்டின் தலைவர்கள் என்றும் மக்களின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொண்டு நாட்டில் உலவிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட எந்த அமைப்பையும் பிராமணர் அல்லாத மக்கள் உருவாக்கவில்லை என்ற ஆதங்கத்தை முதலில் தெரிவித்துக் கொண்டது தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்.
அரசின் வேலைவாய்ப்புகள் எப்படி பிராமணர்களுக்கு மட்டுமே அதிக அளவில் பங்கீடு செய்யப்படுகிறது
என்பது சென்னை எக்ஸிக்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினராக இருந்த சர் அலெக்சாண்டர் கார்டியூ 1913ல் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் அளித்த சாட்சியத்தைக் கொண்டு கொள்கை அறிக்கையில் விளக்கப்பட்டது. அவர் கொடுத்த சாட்சியம் இதுதான். 'இந்தியன் சிவில் சர்வீஸுக்கென இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில் பிராமணர்களே முழுவதும் வெற்றி பெறுகின்றனர். 1892 முதல் 1904 வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற பதினாறு பேர்களில் பதினைந்து பேர் பிராமணர்கள். சென்னை மாகாணத்தில் உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்களுக்கு 77 இடங்கள். பிராமணர் அல்லாதவருக்கு 30 இடங்கள். ஆச்சரியம் என்னவென்றால், போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும்கூட ஆட்களை நியமனம் செய்வதில் பெரும் பகுதி, பிராமணர் கையில்தான் இருந்தது. அரசாங்க அலுவலகங்களில் காணப்பட்ட நிலையே நகரவை, மாவட்டம் கழகம் முதலிய நிறுவனங்களிலும் இருந்துவந்தது. பிராமண வாக்காளர்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில் பிராமணர் அல்லாதார் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. பிராமணர் அல்லாத வாக்காளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருவரை ஆதரிப்பது கிடையாது. ஆனால், பிராமணர்கள், யார் போட்டியிட்டாலும் பிராமணர்களையே ஆதரிப்பர். இதுதான் அப்போதைய அரசியல் சூழ்நிலை. 1914க்குரிய சென்னைச் சட்டமன்ற மேலவைக்கூட்டத்தில் காலஞ்சென்ற குஞ்ஞராமன் நாயர் (குன்கிராமன் நாயர்) கேட்ட கேள்விக்கு, 'சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650பேரில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தினர் 74 பேர்' என்று பதில் கூறப்பட்டது. கல்வி கற்பதில் பிராமணர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்ததற்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லாததற்கும் சில காரணங்களைச் சொன்னது அந்த அறிக்கை. 'பிராமண ஆதிக்கத்துக்குக் காரணம் கூறுபவர்கள், பிராமணர் அல்லாதார்களை விடக் கல்லூரிப் படிப்பு பெற்ற பிராமணர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும் பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர். இதை யாரும் மறுக்கவில்லை. பழங்காலந்தொட்டே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக்களிலே உயர்ந்த. புனிதமான சாதி என்று கருதும் தன்மை. நிலையான நம்பிக்கை. இவற்றை நூல்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவும் சொல்லி சொல்லித் தாங்களே ஏனையோரைவிட உயர்ந்தவர்கள், தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். இவையெல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் செல் வாக்கைத் தேடித்தந்தன.' அதேசமயம் பிராமணர் அல்லாதவர்களும் கணிசமான அளவுக்குக் கல்வியறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னது அந்த அறிக்கை. கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூடப் பிராமணர்கள் தாம் படித்தவர்கள் என்றும் கூறமுடியாது. வெகுகாலத்துக்குப் பின்பு படிக்கத் தொடங்கினாலும் பிராமணர் அல்லாதாரும் அத்துறையில் முன்னேறிவருகின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் ஒவ்வொரு நிலையில் இருக்கின்றனர். செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், முதலியார் முதலிய வகுப்பினர் மிகவிரைவாக முன்னேறி வருகின்றனர். மிகப்பின்தங்கியவர்கள்கூட மிக அக்கறையுடன் முன்னேறு வதற்காக உழைத்துவருகின்றனர். படிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. அறிவுத்துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில் தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது, தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமாக உரிமையாக்கிக் கொண்டு, பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக்கூட இடங்கொடுக்காமல் இருந்துவருவதுதான்.' பிரிட்டிஷாரின் ஆட்சி பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பதிவுசெய்தது கொள்கை அறிக்கை. ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் விரும்பவில்லை. இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு சாதியினர், வகுப்பினர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். தவறினால், நாட்டில் தேசபக்தி இன்றி, ஒற்றுமையின்றி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, சீரழிய நேரிடும்.யாதொரு தகுதியுமற்ற அரசியல் அமைப்பைத் தயார் செய்வதைச் சில அரசியல்வாதிகள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். அத்தகைய அரசியல் அமைப்பை நாங்கள் விரும்பவில்லை. மக்களிடத்தில் படிப்படியாக ஆட்சியை எப்படி ஒப்படைக்கவேண்டும் என்பதை முடிவுசெய்து, முன் யோசனையுடன், தாராளமாக உரிமைகளைக் கொடுத்து ஆட்சி நடத்த மக்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கவேண்டும். 'இந்தியாவின் உண்மையான நன்மையைக் கருதி, ஆங்கில ஆட்சிமுறையைப் போன்று நீதியும் உரிமையும் விளங்கும் ஆட்சியே வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆங்கில ஆட்சியில் பற்றுடையவர்கள். அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாட்சியில் பல குறைபாடுகளும் குற்றங்களும் காணப்படினும் அது நேர்மையாகவும் அனுதாபத்துடனும் நடைபெறுகிறது. 'போரில் வெற்றிகண்டவுடன் ஆங்கில அரசியல்வாதிகளும் பாராளுமன்ற மும் இந்திய அரசியல் அமைப்பைப் பற்றிக் கவனிப்பார்கள். அரசியல் உரிமைகள் வேண்டும் என்று கோருவதற்கு இந்தியா உரிமை பெற்றுவிட்டது. அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்றால் உண்மையான உரிமைகள் விரிவாக இருக்கவேண்டும். ஒவ்வொரு இனத்தினருக்கும், வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டிலுள்ள செல்வாக்கு, தகுதி, எண்ணிக்கையை மனத்தில்கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பைக் கொடுக்க வேண்டும். உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை முழு அதிகாரமும், நிதியைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுக்கவேண்டும். சுயமரியாதைக்கு இழிவு இல்லாது, ஆங்கில சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பிற சுதந்தர நாடுகளுக்கு ஒப்பான தகுதியைக் கொடுக்கவேண்டும். அறிக்கையின் முடிவில் பிராமணர் அல்லாதாருக்கு சில அறிவுரைகளும் கோரிக்கைகளும் இடம்பெற்றன. விழிப்படைந்த பிராமணர் அல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள்கையில்தான் இருக்கின்றது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிது. அத்துடன் மிக அவசரமானதுமாகும். முதல் வேலையாக, சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்கவைக்கவேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து, பிராமணர் அல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி, அதிகமானவர்களைப் படிக்கச்செய்யவேண்டும். நிதிதிரட்டி, ஏழைகள் படிப்பதற்கு உதவிசெய்யவேண்டும். 'கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம் முதலியவற்றுக்கும் நாம் தீவிரமாக உழைக்கவேண்டும். அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி, சங்கங்களும் ஆங்காங்கே அமைக்கவேண்டும். உரிமைகளுக்காகப் போராடவேண்டும். இவைகளைச் செய்யாது நாம் இதுவரை வாளாவிருந்தோம். அதை சில சுயநலவாதிகள் தங்கள் நலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். பிராமணர் அல்லாத மக்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள முன்வரவேண்டும். கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் என்று பல துறைகளில் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான அனைத்து செயல்களையும் மேற்கொள்வது அவசியம். 'இன்னும் சிறிது காலத்துக்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருதவேண்டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது, தான் தாழ்ந்தவன் என்று கருதாது, சுயமரியாதை யுடன், சம உரிமை பெற்றவன் என்று எண்ணவேண்டும். சுயமரியாதையுடன் சமநிலையில் இருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொரு வரும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.' Non-Brahmin Manifesto என்கிற பிராமணர் அல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை வெளியானது. பிராமணர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது.'பிராமணர் அல்லாதார் கொள்கை விளக்க அறிக்கையை மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்துடனும் நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த அறிக்கை தேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பது. இதன் காரணமாக, தேசிய முன்னேற்றத்தின் எதிரிகளுக்குத் துணைபோகும் நிலை உருவாகும். என்றது, தி ஹிந்து பத்திரிகை. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஒரு விஷமத்தனமான இயக்கம். அந்தச் சங்கத்தின் நிறுவனர்களை இந்த தேசத்தின் நண்பர்களாகக் கருதமுடியாது என்பது டாக்டர் அன்னிபெசண்ட் நடத்திவந்த நியூ இந்தியா பத்திரிகையின் விமரிசனம். வெறுமனே எழுத்து அளவில்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் உருவாகியிருந்தது. நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை. உறுப்பினர் சேர்க்கும் படலம் கூட இனிமேல்தான் முறைப்படி தொடங்கப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே கண்டனக் கணைகள். பழுப்பதற்கு முன்பே கல்லடிகள், பழுத்துவிடும் என்பதால்! --ஆர். முத்துக்குமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அமைப்பாய் திரள்வோம்- தொல் திருமாவளவன் [PDF]

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்! சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! "அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!" என்பது சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தொல். திருமாவளவன் இதனை முன்ன நடத்தியுள்ளார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளன: முக்கிய நோக்கங்கள் • சமத்துவ சம...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...