அன்பால் சினத்தை அடக்கிடு; நன்மையால் தீமையை அகற்றிடு; ஈகையால் உலோபித்தனத்தை விலக்கிடு, வாய்மையால் பொய்யினைப் போக்கிடு.
தம்மபதம்
கி.மு. 623ம் நூற்றாண்டில் ஒரு நாள். கோசல நாட்டின் தலைநகரான கபிலவாஸ்து நகரம், அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
மன்னன் சுத்தோதனனும், மகராணி மாயாதேவியும் மிகவும் சந்தோஷத்தோடு. ஏராளமான தான தர்மங்களைச் செய்து கொண்டிருந்தனர். காரணம், அன்று அந்த நாட்டின் குட்டி இளவரசனுக்கு, பெயர் சூட்டு விழா.
சாதாரணமாகவே, எந்த நாட்டிலும் மன்னன் மகனுக்கு பெயர் சூட்டும் நாளில் தலை நகரில் விழா திமிலோகப்படும். அதிலும் இந்த நாட்டு இளவரசன், பல ஆண்டுகால எதிர்பார்ப்பு. ஏக்கம் இவற்றுக்குப் பின் பிறந்திருப்பதால், கொண்டாட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.
குறிப்பிட்ட நல்ல நேரத்தில், குழந்தைக்குப் பெயர் சூட்ட எழுந்தார். அரசனின் மூத்த ஆலோசகர், அசிடா. குழந்தையை தங்கத் தொட்டிலிருந்து மெதுவாகத் தூக்கினார். மெதுவாகச் சிணுங்கிய குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
'இவன் எதிர்காலத்தில் செயற்கரிய செயலைச் செய்யப் போகிறான்.' அவரது உள்ளுணர்வு சொல்ல, அதனால் கௌதமன் என்றும், லட்சியத்தை அடைந்தவன் என்ற பொருள்பட சித்தார்த்தன் என்றும், இரு பெயர்களை இட்டார்.
"வாழ்க இளவரசர் சித்தார்த்தன்.!" எல்லோரும் உரத்த குரலில் சொல்ல, குழந்தை அந்த சத்தத்தால் சிணுங்கி அழுதது. அவ்வளவுதான்... துடிதுடித்துப் போனார் சுத்தோதனர். மனம் பதறச் சொன்னார். "இவ்வளவு மென்மையானவனான என் மகன். இனி எதற்காகவும் அழக்கூடாது.. அவனுக்கு கஷ்டம் என்பதே தெரியக்கூடாது. வெயில், மழை, பனி, குளிர் என்று எதனாலும் அவனுக்கு வாட்டம் உண்டாகக் கூடாது. அதற்கேற்றபடி மாளிகையை மாற்றுங்கள்... துன்பம் என்பதே தெரியாதபடி என் மகன்வளரவேண்டும்!"
அரசரது ஆணை நிறைவேற்றப்பட்டது.
சின்னக் குழந்தைகள் ஓடியாடி விளையாடி, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு அழுமே... அப்படிப்பட்ட சின்னச் சின்ன காயம், வலி, வேதனை என்று கூட எதுவுமே தெரியாமல் வளர்ந்தான். இளவரசன் கௌதமன்.
குட்டி இளவரசன். சுட்டித்தனங்கள் செய்து, வளர்ந்து வாலிபனானான். சுபயோக சுபதினம் ஒன்றில், அவனது அத்தை மகள் யசோதரையை, அவனுக்கு மணமுடித்து வைத்தார். அரசர்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. உரிய காலத்தில், யசோதரை கருவுற்றாள். அதனால், அரண்மனையில் ஆனந்தமும் அதிகரித்தது.
இன்பம்... இன்பம்.. இன்பம்.. இப்படியே சென்று கொண்டிருந்தால், 'சித்தார்த்தன்' என்ற இளவரசரின் பெயருக்கு அர்த்தம் இல்லாமல் அல்லவா போய்விடும்!அதனால்தானோ என்னவோ, அந்த சம்பவம் நடந்தது. ஒருநாள், மன்னர் எவ்வளவோ தடுத்தும், மாளிகையைவிட்டு வெளியே சுற்றிப் பார்க்கப் போனான் சித்தார்த்தன்.அப்போது வழியில், வயது முதிர்ந்து உடல் தளர்ந்து போன முதியவர். பிணியால் பாதிக்கப்பட்ட நோயாளி, என இருவரைக் கண்ட இளவரசன், மூன்றாவதாகக் கண்ட காட்சிதான், அவனை மிகவும் உலுக்கியது.அது, ஒரு சவ ஊர்வலம்,(அஞ்ஞான இருளிலிருந்து உலகை மீட்பதற்காக உதித்த கௌதமன், தானே அந்த இருளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, விண்ணவர்கள் செய்த விளையாட்டே, சித்தார்த்தன் அந்த மூன்று காட்சிகளையும் கண்டது என்றும் ஒரு வரலாறு உண்டு).அன்று முழுதும் அந்த மூன்று காட்சிகளே மீண்டும் மீண்டும் தோன்றின சித்தார்த்தனின் மனத்தினுள், இன்பம், சந்தோஷம், மகிழ்ச்சி இவை மட்டுமே தெரிந்திருந்த அவனுக்கு. முதன் முறையாக துன்பம், துயரம், பிணி என்னும் இருட்டு தெரிய ஆரம்பித்தது.
அதைத் தொடர்ந்து, அந்த இருள் சூழாமல் இருக்க என்ன வழி? என்பதை சிந்திக்கத் தொடங்கினான் சித்தார்த்தன்.ஞானத்தின் வித்து, சித்தார்த்தனின் சிந்தையில் கருக்கொள்ள ஆரம்பித்த அதே நேரத்தில், கருவுற்றிருந்த அவன் மனைவிக்கு, பிரசவ காலம் நெருங்கியது.உரிய காலத்தில் ஆண் மகவை ஈன்றெடுத்தாள், யசோதரை. குழந்தை பிறந்தசந்தோஷமோ. குதூகலமோ கொஞ்சம்கூட இல்லாமல், அஞ்ஞான இருளிலிருந்து வெளிப்படும் யோசனையிலேயே மூழ்கியிருந்தான் சித்தார்த்தன். அதனால்தானோ என்னவோ, அன்பு மகனுக்கு, 'தடை' என்னும் பொருளில், 'ராகுலன் என்று பெயரிட்டான்.
மாயாதேவியின் மகனான சித்தார்த்தனுக்கு. மனைவி, மகன் பாசம் இவையெல்லாம் மாயையின் உருவங்கள்.. அவற்றைவிட்டு நீங்குவதுதான் ஞானம் தேடும் வழியின் முதல்படி என்று தோன்றியது. ஒருநாள், நள்ளிரவு நேரம், அரண்மனையே தூங்கிக் கொண்டிருந்தது.
ஞான விழிப்பிற்கான விடை தேட நினைத்த சித்தார்த்தனோ விழித்துக் கொண்டிருந்தான்.. மனதிற்குள் ஒரு திட்டத்தோடு, படிப்படியாக ஞானத்தைத் தேடும் முடிவோடு, அரண்மனைப் படிகளைக் கடந்து வெளியேறினான்... கயை நோக்கிச் சென்றான்.
கயையை அடைந்த சித்தார்த்தன், தான் முடி மன்னனாக இருக்க வேண்டியவன் என்ற எண்ணத்தைத் துறந்தான். உயர் ஆடை, ஆபரணம் துறந்தான். முடி துறந்தான், முற்றும் துறந்தான்.
ஆரம்பத்தில், ஆதாரகாலமா என்பவரையும், பின்னர் உத்ரகா ராம புத்ரா என்பவரையும் ஆசிரியராக அடைந்து, அஞ்ஞானம் தொலைக்க முயன்றான் சித்தார்த்தன். ஆனால், அவன் தேடிய விடை கிடைக்காததால், தனியே சென்று தவம் செய்ய முடிவு செய்தான்.
தவம் செய்ய நினைத்த கௌதமன், தக்க இடம் தேடினான். அவன் வந்து அமர்வதற்காகவே காத்திருப்பது போல், வளர்ந்து நின்றது ஓர் அரச மரம். அம்மரத்தின் கீழ் அமர்ந்தான், ஞானத்தை அடையும் வழி தேடி தன் தவத்தைத் தொடங்கினான்.
மரத்தின் தன் கீழ் ஒரு ஞான சூரியன் உட்கார்ந்திருக்கிறான் என்ற உணர்வோ என்னவோ, சூரியனின் ஒளி புகுந்து செல்வதையும் தடுத்து, கிளை பரப்பி வேகமாக வளர்ந்தது மரம். அதைவிட வேகமாக ஞானத் தேடலை நோக்கிப் பரந்து விரிந்தது கௌதமனின் மனம்.
ஒன்றல்ல இரண்டல்ல. ஆறு ஆண்டுகள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் சூரியஉதயத்தின் போது. கௌதமனின் மனதிற்குள் ஞானமும் உதித்தது.முப்பத்தாறு வருடங்கள் சித்தார்த்தனாகவும், கௌதமனாகவும் இருந்த நிலைமாறி, புத்தர்- (விழிப்புற்றவர். ஞானத்தெளிவு பெற்றவர்) என்றழைக்கப்பட்டார்.
போதி மரத்தின் கீழிருந்து ஞானம் பெற்ற புத்தர். தாம் கண்டறிந்த உண்மைகளை,மக்களுக்கு போதிக்கப் புறப்பட்டார்.
உபதேசங்களை உலகிற்கு உபதேசிக்க முடிவு செய்த புத்தர். முதலில் மிருகதாவனம் அதாவது மான்தாவும் காடு எனும் காட்டுக்குச் சென்றார் (இத்தலமே சாரநாத்). வாரணாசி அருகே இருந்த அங்கே புத்தர் சென்றதற்கு. ஒரு காரணம் இருந்தது.
புத்தர், ஞானம் பெறுவதற்கான தவத்தினைத் தொடங்குவதற்கு முன்பாகவே ஐந்து பேர் அவரைத் தம் குருவாக ஏற்றிட விரும்புவதாகச் சொன்னார்கள். பின்னர், அவரது தவ விருப்பத்தை உணர்ந்து, பிரிந்து சென்றார்கள். அவர்கள் ஐவரும் அந்த வனத்தில் இருப்பதை அறிந்தே, அங்கு சென்றார் புத்தர்.
'ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்' - முதன்முதலாக தனது போதனையை அந்த ஐவரிடமும் சொன்னார் புத்தர். அவரது உபதேசத்தால் உள்ளத் தெளிவு பெற்ற அவர்கள், அவரது சீடர்களாயினர்.
ஐவராகத் தொடங்கிய சீடர்களின் எண்ணிக்கை, ஐம்பதாயிற்று. ஐநூறாயிற்று. எங்கும். எவரிடமும் பகைமை பாராட்டாமல், எல்லோருக்கும் தாம் கண்டறிந்த நல்வழியை உபதேசித்தார் புத்தர்.
அன்பு மார்க்கத்தை அவர் பரவச் செய்ததால், எங்கும் எளிதில் பரவின அவரது போதனைகள்.
சித்தர்கள், யோகிகள் போன்று வித்தைகள் எதையும் புரிய விரும்பியதில்லை புத்தர் ஆனால், அவையும் தன்னால் முடியும் என்பதை உணர்த்தும் விதமாக, சில சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
ஒரு சமயம், உருவேலா எனும் நகரில் தங்கியிருந்தார் புத்தர். அப்போது, அவர் தங்கியிருந்த வீட்டினுள் கொடிய விஷமுள்ள நாகம் ஒன்று புகுந்தது. எல்லோரும், அந்த அரவத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கினர். படமெடுத்து ஆடிய அந்தப் பாம்பினை அன்பொழுகப் பார்த்தார். புத்தர். அந்தப் பார்வைக்குக் கட்டுப்பட்ட பாம்பு. தன் படத்தைக் கீழிறக்கி பரபரவென்று ஊர்ந்து வெளியேறியது.
மற்றொரு சமயம், அவர் தங்கியிருந்த வீட்டினர், ஹோமம் ஒன்றைச் செய்யத் தொடங்கிய போது, அதில் போடப்பட வேண்டிய சமித்துகள் ஈரமாக இருந்ததால், அக்னி எழுப்ப முடியாது தவித்தனர். அப்போது புத்தர், 'இத்தி' எனும் அற்புத சக்தியை உபயோகித்து, ஹோமத்தீயை எரியச் செய்து உதவினார்.
ஆயிரக் கணக்கான சீடர்கள் சூழ பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஞான மார்க்கத்தை விளக்கிய புத்தர், ஒரு சமயம், கபிலவாஸ்துவுக்குச் சென்றார். அங்கேயும் பலர். புத்தரின் சீடர்களாகிப் பின் தொடர்ந்தனர். அவர்கள் எல்லோரையும் போல் புத்தர் தம் மகனான ராகுலனையும் சீடனாக ஏற்க வேண்டுமென வேண்டினாள், அவர் மனைவி யசோதரை, புத்தர் அதற்கு சம்மதித்து ராகுலனையும் சீடனாக ஏற்றார்.
செல்லும் பாதை எங்கும் உயிர்க் கொலை செய்யாமை, பொய் கூறாமை. கள்ளுண்ணாமை என அன்பு மார்க்கத்தைப் பரவச் செய்த புத்தர், அக்காலத்தில் பகைமை கொண்டு அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்த சாக்கியர்களையும், கோலியர்களையும் சந்தித்து சமாதானம் செய்து வைத்து அமைதிப் பாதைக்கு வழி செய்தார்.
பகையில்லா பூமியாக, எங்கும் அமைதி நிலவ வேண்டும். ஆசை ஒழிய வேண்டும் என புத்தர் விரும்பினாலும், அவருக்கு எதிரான சதிகள் சிலவும் நிகழ்ந்தன.
புத்தரின் அறிவுரையான அன்புரையை ஏற்று அதனைப் பரவச் செய்வதர்களுள் முக்கியமானவன், மகத மன்னன் பிம்பிசாரன். புத்தருக்கு எழுபத்திரண்டாவது வயது நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த மன்னன், அவனது மகனாலேயே கொல்லப்பட்டான். அதோடு, பிம்பிசாரனின் மகன், புத்தருக்கும் தீங்கு விளைவிக்க முயன்றான். ஆனால், ஆண்டவன் அருளால், புத்தர் அந்த ஆபத்துகளிலிருந்து தப்பினார்.
"எல்லா உயிர்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே தோன்றுகின்றன.. அந்தக் காரணம் நிகழ்ந்ததும், அவற்றின் மறைவு ஏற்படுகிறது" இது, புத்தரின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று.
அந்த போதனையைப் போலவே, புத்தருக்கும் மறைவு நேரம் நெருங்கியது. பல்வேறு இடங்களுக்கும் சென்று தனது போதனைகளை உபதேசித்து வந்த புத்தர், தமது எண்பதாவது வயதில் குசிநாகரில் இருந்த போது, தனது இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்தார்.
தன் ஆப்த சீடனான ஆனந்தனை அழைத்தார். "ஆனந்தா, ஆன்மா எனும் பயணியைச் சுமந்து செல்லும் உடல் என்னும் இந்தத் தேர். இற்றுவிட்டது. சிதிலம் அடைந்துவிட்ட வண்டியை, தோல் வார் கொண்டு கட்டி வைத்தது போல், இன்னும் சில நாட்களே இது ஓடும்.!" இப்படிச் சொன்ன புத்தர், தமது கொள்கைகளை சீடர்களாகிய பிட்சுகள் உலகெங்கும் பரவச் செய்யவேண்டிய முறைகளையும் சொன்னார்.
அதைத் தொடர்ந்து, பிணியின் பிடியில் சிக்கியிருந்த புத்தர், படுக்கையில் வீழ்ந்தார்.
ஒருநாள். தம் அருகே இருந்த ஆனந்தனிடம், "ஆனந்தா, பஞ்ச பூதங்களால் ஆகியஇவ்வுடலைவிட்டு உயிர் நீங்கியதும், முறைப்படி எரியூட்டு. பின்னர், என்பு (எலும்பு)பல், சாம்பல் இவைகளை வைத்து ஸ்தூபங்கள் எழுப்பச் செய்" என்று சொன்னார்.பின்னர் தியானத்தில் ஆழ்ந்த புத்தர், படிப்படியாக மகா நிர்வாணம் எய்தினார்.சுற்றி நின்ற அவரது சீடர்கள் உரத்து, ஒரு மித்து சொன்னார்கள்.
"புத்தம் சரணம் கச்சாமி...
சங்கம் சரணம் கச்சாமி..
தம்மம் சரணம் கச்சாமி"
அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம், இன்னும் வாழ்கிறார் புத்தர்.
ஜெயாப்ரியன்