காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்
பிறப்பு
அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார் மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார்.[5] நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.[6] சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.
இளமைப் பருவம்
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார்[7] மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[8] அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;[9] அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள்[9] வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்[8] சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக[9] சிறிது காலம் பணிபுரிந்தார்.
கல்வி
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[8] , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[9] பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[10] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது[11]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது[11], அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்[11]. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
பேச்சற்றலும் படைப்பாற்றலும்
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர்.இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. இவர் பத்திரிகையாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
மொழிப்புலமை
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
“ "No sentence can end with because because, because is a conjunction.
எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்
”
என்று உடனே பதிலளித்தார்.
பெரியார் உடனான தொடர்பு
அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
தத்துவம்
அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்
“ ஒன்றே குலம், ஒருவனே தேவன் ”
என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.
“ கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான் ”
என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை[16] ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் [16] என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.
அரசியல் நுழைவு
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [17] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917[18] இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் [18] கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 [19] இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்[20].
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக[9] பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)[9] தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்[21].
பெரியாருடன் கருத்து வேறுபாடு

பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக[22] தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[சான்று தேவை] இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக [23] எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று[22]. இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல[17] என்பதை இவர் வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்[17].
பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்[24].
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30[24]) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.